நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலையோரங்களில், ஆதரவற்றவர்கள் உணவிற்காக சிரமப்படக்கூடாது என்ற அடிப்படையில் மாநகராட்சி சார்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் மீட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு, தேநீர் வழங்கப்பட்டதுடன் அவர்களின் நடைமுறை வாழ்வியலை மாற்றும் விதமாகவும் மன அழுத்தத்தை விரட்டும் விதமாகவும் திரை கட்டி திரைப்படமும் காட்டப்பட்டு யோகா கற்றுத்தரப்படுகிறது.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத்தில் செய்தி தொகுப்பு வெளியானது. அதில், ஆதரவற்றவரிகளிடம் கேட்டதில், எங்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்தால் இனி வீதிக்கு செல்ல மாட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து, தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கை தொழில் கற்று கொடுக்கப்பட்டது. முதல்கட்டமாக பேப்பர் கவர், பழ பொக்கே போன்றவை செய்ய சொல்லி கொடுக்கப்படுகிறது.
இந்த பயிற்சியை செயல்முறைப்படுத்தினால், தினம் 300 முதல் 500 ரூபாய்வரை சம்பாதிக்க முடியும். யாசகம் கேட்டு வீதியில் திரிந்தவர்கள் ஊரடங்கு உத்தரவில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பிறரிடம் கையேந்தாமல் சுயமாக சம்பாதிக்கும் நிலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க...துபாயிலிருந்து சென்னை வரும் விமானங்கள்: முதன்மை செயலாளர் ஆய்வு!