திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 621 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது வெப் கேமரா கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் வண்ணம் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதற்காக 621 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 42 நபர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் நாளைய தினம் நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் 51 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாகவும், பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் நேரலை செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர், நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து வாக்குச்சாவடி மையத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது என தெரிவித்த அவர் பதற்றமான வாக்குச்சாவடிகள் நுண் பார்வையாளர்கள் பணி அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களுக்கு தனித்தனியாக வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. நடைபெற உள்ள தேர்தலுக்கு தனி பாதுகாப்பு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
6 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கி அதிவிரைவு ரோந்து பணி குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்படவுள்ளது. மாவட்டம் முழுவதும் பைக் பேட்ரோல் மூலம் தொடர் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலைப் போன்று 13 வகையான கரோனா தடுப்பு உபகரணங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மானூர் பகுதியில் 4.7 லட்சம் ரூபாய் பணமும், நாங்குனேரியில் 40 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தனித்தனியாக பாதுகாப்பு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.