திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளைக் கொண்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்த சரவணன் திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ மூலம் அடையாளம் காணப்பட்டு திருநெல்வேலி மாநகராட்சியின் 16வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு பெற்றார்.
பின்னர், திமுக தலைமை இவரை மேயராக அறிவித்தது. அதன் பெயரில் ஒன்றரை ஆண்டுகளாக திருநெல்வேலி மாநகராட்சி மேயராக சரவணன் செயல்பட்டு வருகிறார். அதேசமயம், அப்போதைய திமுக மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் சரவணனை சாதாரண கவுன்சிலராக மட்டுமே திட்டமிட்டு இருந்தார். தனக்கு மிகவும் வேண்டப்பட்ட மற்றொரு நபரை மேயராக்க வேண்டும் என்று அப்துல் வஹாப் எண்ணியிருந்தார்.
ஆனால் கட்சி தலைமை திடீரென சரவணனை மேயராக்கியதால் அப்துல் வஹாப் அதிர்ச்சி அடைந்தார். பின் வேறு வழி இல்லாமல் சரவணனை ஏற்றுக் கொண்ட அப்துல் வஹாப் தனக்கு கீழ் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்வது மற்றும் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை முடிவு செய்வது உட்பட அனைத்தையும் தன்னை கேட்டு தான் முடிவெடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்ததாகவும், பரபரப்பாக பேசப்பட்டது.
ஒரு கட்டத்தில் அப்துல் வஹாப் பேச்சைக் கேட்டு மேயர் நடக்க மறுத்தார். தனிவழியில் பயணிக்க தொடங்கினார். இதனால் அப்துல் வஹாப், அவர் மீது கடும் கோபம் அடைந்தார். மேலும், அப்துல் வஹாப் நெருக்கடியில் இருந்து தப்பிக்க மேயர் அப்துல் வஹாப்பின் எதிர் அணியான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா பக்கம் சென்றார்.
நெல்லை மத்திய மாவட்ட திமுகவை பொறுத்தவரை மாலைராஜா, மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் மற்றும் முன்னாள் அமைச்சர் மைதீன் கான் ஆகியோர் ஒரு அணியாகவும், அப்துல் வஹாப் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். எனவே, எதிர் அணிக்கு சென்றதால் கடும் கோபம் அடைந்த அப்துல் வஹாப் தனது ஆதரவு கவுன்சிலர்கள் மூலம் தொடர்ச்சியாக மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக பிரச்னைகளை ஏற்படுத்தி வந்தார்.
குறிப்பாக, மேயர் சரவணன் மாநகராட்சி திட்ட பணிகளில் ஊழல் செய்வதாக திமுக கவுன்சிலர்களே பகிரங்கமாக மன்ற கூட்டங்களில் குற்றம் சாட்டினர். மேயரைக் கண்டித்து தொடர்ச்சியாக மன்ற கூட்டங்களில் தர்ணா போராட்டங்களும் நடைபெற்றன. திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் நெல்லைக்கு வந்திருந்த போது மேயர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை வரவேற்கவிடாமல் அப்துல் வஹாப் தரப்பினர் துரைமுருகன் முன்னிலையிலையே மோதிக்கொண்டனர். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த துரைமுருகன் சென்னை சென்ற ஓரிரு நாளில் அப்துல் வஹாப்பை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார்.
எனவே, நெல்லை திமுகவில் உள்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானது. ஒருபுறம் அப்துல் வஹாப் பதவி பறிக்கப்பட்டதால் இனிமேல் அவர் தரப்பில் இருந்து தனக்கு நெருக்கடி வராது என்று மேயர் எண்ணினார். அதே போல் அப்துல் வஹாப்பிற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் மைதீன் கான் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எனவே, மறுபுறம் தனது அணியை சேர்ந்த நபர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் இனி நமக்கு தொந்தரவு இருக்காது என்று மேயர் மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால் பதவி பறிபோன பிறகும், அப்துல் வஹாப் அணியில் 40க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அவருக்கு பக்க பலமாக நிற்கின்றனர். எனவே, அந்த கவுன்சிலர்கள் மூலம் தொடர்ச்சியாக அப்துல் வஹாப் மேயருக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் 40க்கும் மேற்பட்டோர் மேயர் சரவணனை மாற்றக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
அதேபோல் சமீபத்தில் நெல்லை வந்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேயர் சரவணனை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்களே கடிதம் எழுதி இருப்பதை பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசி இருந்தார். மேலும், மேயர் சரவணன் ஊழல் செய்வதாக அக்கட்சியினரே தெரிவிப்பதாக அண்ணாமலை பேசியிருந்தார். மேயர் சரவணன் திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியபடி பல்வேறு திட்ட பணிகளில் முறைகேடு செய்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. எனவே மேயர் மீது திமுக தலைமை எந்த நேரமும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதேசமயம், ஆளும்கட்சியை சேர்ந்த மேயர் மீது நடவடிக்கை எடுத்தால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் நெல்லை மேயர் விவகாரத்தில் திமுக தலைமை முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக திமுக தலைமைக்கு கடிதம் கொடுத்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த கடிதத்தில், அவர் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு நெல்லை மேயர் பொறுப்பில் இருந்து தான் விடுபட போவதாக கூறி இருப்பதாக தெரிகிறது. ஆளும்கட்சி மேயர் ராஜினாமா செய்வதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனை ஈடிவி பாரத் நெல்லை செய்தியாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது "அது ஒரு பொய்யான தகவல் ஓகே" என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி நிறுத்தி வைப்பது நியாயமற்றது: என்.ஆர்.தனபாலன்