திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1,300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க சுமார் 150 சிறை காவலர்கள் மற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர்
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த ஜீவா என்ற கைதி, பிணையை மீறிய காரணத்துக்காக காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். அங்கு தனக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக கூறியதால், காவலர்கள் அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது ஜீவா நூதனமாக தப்பி ஓடி விட்டார்.அதேபோல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதக நேரியைச் சேர்ந்த டேவிட் என்ற ஆயுள் தண்டனை சிறை கைதி, சிறை அங்காடியில் நன்னடத்தை காரணமாக டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அங்காடி பணியில் இருந்த தலைமைக்காவலர் மாரியப்பனின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி தப்பி ஓடியுள்ளார்.
மேலும் நெல்லை சீவலப்பேரியைச் சேர்ந்த கொலை வழக்கு கைதி சீனித்துரை, பரோலில் வெளியே சென்ற நிலையில் நேற்றுடன் அவருக்கு பரோல் முடிந்தது. நேற்று மாலைக்குள் அவர் சிறைக்கு திரும்ப இருந்த நிலையில், திடீரென தலைமறைவானதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் பாளையங்கோட்டை சிறை கைதிகள் மூன்று பேர் அடுத்தடுத்து ஓட்டம் பிடித்த சம்பவம், சிறை அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறை அலுவலர்கள் மற்றும் உளவுத்துறையின் அலட்சியம் காரணமாகவே கைதிகள் தப்பி செல்வதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக டீ மாஸ்டர் டேவிட் ஏற்கனவே ஒருமுறை தப்ப முயற்சி செய்தது தெரிந்த பிறகும், சிறை அலுவலர்கள் மீண்டும் அவரை சிறை அங்காடி பணியில் அமர்த்தியுள்ளனர். சிறை அங்காடி, போக்குவரத்து சாலை ஓரம் அமைந்திருப்பதால் கைதிகள் எளிதில் தப்ப முடியும். எனவே ஒரு முறைக்கு பலமுறை கைதிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, நற்சான்று பெற்ற கைதிகளை மட்டுமே இதுபோன்று அங்காடி பணியில் அமர்த்துவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது சிறை தலைமைக்காவலர் கந்தசாமியை சஸ்பென்ட் செய்து மத்திய சிறை கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தப்பிச் சென்ற மூன்று பேரில் புளியங்குடியைச் சேர்ந்த ஜீவா என்ற கைதியை மட்டும் காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: காவல் உயர் அலுவலர்களின் கையெழுத்தை தானே போட்ட தலைமைக்காவலர் பணியிடை நீக்கம்!