திருநெல்வேலி: திருமணமான புதுப்பெண்ணை வழியனுப்பி விட்டு மணமகள் வீட்டார் வீடு திரும்பும் போது, பொன்னாக்குடி அருகே நான்கு வழிச் சாலையில் தேங்கி இருந்த மழை நீரால் அவர்கள் வந்துகொண்டிருந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் படுகாயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், ராமய்யன்பட்டி சங்கு முத்தம்மாள் தெருவைச் சேர்ந்த பெண்ணுக்கு, நாங்குநேரியைச் சேர்ந்த நபருடன் நேற்று ஜூலை 5ஆம் தேதி ராமய்யன்பட்டியில் திருமணம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மாலையில் புதுமணத் தம்பதிகளை நாங்குநேரியில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு, உறவினர்கள் இரண்டு வாகனங்களில் அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.
பின்னர் மணமகள் உறவினர்கள், அங்கிருந்து தங்களது சொந்தக் கிராமத்திற்கு திரும்புகையில், பொன்னாக்குடி அருகே நான்கு வழிச் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, இரவு சாலையில் தேங்கி இருந்த மழை நீரால் மணமகள் உறவினர்கள் வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாலை முழுவதும் மழை நீரால் ஈரமாக இருந்ததால், 50 அடி தூரத்திற்கு கார் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதில் சாமித்துரை மற்றும் பிரவீன் ஆகிய இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த கண்ணன், நவீன், முத்துக்குமார், லட்சுமணன், பத்ரகாளி, ஜான்சன் துரை உள்ளிட்ட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து, பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த உறவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கிடையில் லட்சுமணன் என்பவரும், சிகிச்சையில் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
திருமணமான முதல் நாள் இரவே பெண் வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நான்கு வழிச் சாலையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை பராமரிப்பு செய்பவர்கள் சரிவர உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இந்த சாலையில் விபத்து நேர்வது, உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது. மேலும், டோல்கேட் கட்டணம் மட்டும் அதிகமாக வசூலிக்கும் அவர்கள் சாலையை முறையாக பராமரிப்பதில்லை என தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ.2 லட்சம் பறிமுதல்