திருநெல்வேலி: சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தது.
குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கும் சிலர் அதை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இதை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். அந்தவகையில் நேற்று (ஜூலை 27) நடத்திய சோதனையில், மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 34 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்து 118 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும் சிறப்பு குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்ர்கள் நடத்திய சோதனையில், மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 21 பேரை கைது செய்தனர்.
மேலும் நேற்று (ஜூலை 27) ஒரே நாளில் மட்டும் சட்டவிரோதமாக மதுபானங்கள், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 55 நபர்கள் தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளிநாட்டில் மேற்படிப்பு - சீட் வாங்கித்தருவதாக ரூ.38 லட்சம் மோசடி