திருநெல்வேலி மக்கள் குடியுரிமை இயக்கம் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கிறிஸ்துவ பேராயர்கள், இஸ்லாமிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு அரசு தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய குடியுரிமை கணக்கெடுப்பு ஆகியவற்றை தமிழ்நாட்டில் கொண்டுவரக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.
தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பழங்குடியினர் என அனைவரும் ஒன்றிணைந்து பெரும்பான்மையாக திகழ்கின்றனர். அதனால், இந்து சிறுபான்மையாக மாறக்கூடிய நிலை ஏற்படுகிறது.
இதுவே, ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதாவை அச்சுறுத்துகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை. ஆர்எஸ்எஸின் செயல்திட்டம் என்னவோ அதுவே பாரதிய ஜனதாவின் செயல்திட்டமாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பதுபோல் பிரதமர் மோடி நடிக்கிறார். பாரதிய ஜனதா செய்ய நினைப்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடுக்கிறது. ஆகவே, அவர்களுக்கு எதிரி இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான்.
நடந்து முடிந்த தேர்தலில் தேசியக் கட்சிகள், பாரதிய ஜனதாவுக்கு எதிராக அணி திரண்டு இருந்தால், அவர்களை விரட்டி அடித்திருக்கலாம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாமல் பாரதிய ஜனதாவை விரட்ட முடியாது.
வருகின்ற மக்களவை கூட்டத் தொடரிலும் டெல்லி படுகொலை குறித்து விவாதிக்க வேண்டும், அமித் ஷாவை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். இதைத்தவிர வேறு எந்த விவாதத்தையும் நடத்த விடமாட்டோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’அரசியலில் தூய்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்துகாட்டியவர் க. அன்பழகன்’