திருநெல்வேலி: பாலமடை பகுதியைச் சேர்ந்த சிலர், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மூணாறுக்கு கடந்த 22ம் தேதி வேனில் சென்று கொண்டிருந்தனர். போடி மெட்டு அருகே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் பலியானோர் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்குத் தலா ரூ.50,000க்கான காசோலையை, சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்பேரவைத் தலைவர் முன்னால் செல்லக்கூடாது என்ற மரபையும் மீறி, ஆளுநர் அவரது பாதுகாப்பு அதிகாரியை அழைத்து என்ன பேசுகிறார் என அவரிடம் கேட்டார். அதற்குப் பாதுகாப்பு அதிகாரி ஏதோ பதில் சொன்னார். சொன்ன வேகத்திலேயே ஆளுநர் எழுந்து சென்று விட்டார். இதுதான் அங்கு நடந்தது. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது.
உயர்ந்த இடத்தில் இருக்கும் ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது தொடர்பாக கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி இருப்பது நன்றாக இல்லை. நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறிய மசோதாக்கள், முற்றுபெற்றதாக ஆளுநர் சொன்னவை, மீண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அதற்கு சில மணி நேரங்களில் ஒப்புதல் பெறப்பட்டதை அனைவரும் அறிவார்கள்.
முதலமைச்சர்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக பல மாநிலங்களில் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக மாநில முதலமைச்சர் இருப்பதாக கூறப்படுகிறது. சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதலமைச்சர் இருப்பதில் தவறு ஏதும் இல்லை. சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் மூலம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. தீர்மானத்தில் சந்தேகங்கள் இருந்தால் அதற்கான விளக்கங்களைக் கோரலாம். இல்லையென்றால், குடியரசுத் தலைவருக்கு அந்த தீர்மானத்தை அனுப்பலாம். தீர்மானங்களை நிறுத்தி வைப்பது சரியானதாக இல்லை.
இந்தியாவின் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் திராவிட மாடல் பரவி உள்ளது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட பெரியார், அண்ணா போன்ற திராவிடத் தலைவர்களுக்கு வரவேற்பு பதாகைகள் வைக்கிறார்கள். திராவிட மாடல் நாடு முழுவதும் பரவுவதைக் கண்டு, எதிர்க்கட்சிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே திராவிட மாடல் குறித்து பேசுகிறார்கள். எவரை திருப்திபடுத்துவதற்காக முதலமைச்சரிடம் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்கிறார் எனத் தெரியவில்லை. ஓபிசி இட ஒதுக்கீடு மூலமாக 4,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையே இதற்குக் காரணம்" என கூறினார்.
இதையும் படிங்க: ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து; 6 பேர் பலி: நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!