திருநெல்வேலி: மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து துறை இணை அமைச்சரும், நெல்லை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான வி.கே.சிங் இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி வந்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் வி.கே.சிங், “பாஜக அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் சாதி, மதம், இனம் கடந்து பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் யாரையும் புறக்கணிக்கவில்லை.
நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்சக்தி அபியான் திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி, பாகுபாடின்றி அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் இந்தியா தனித்துவம் பெற்று விளங்குகிறது.
பெண்களின் முன்னேற்றம் இந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. நாடு முழுவதும் 200 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நம்மிடம் இருந்து கரோனா தடுப்பூசி, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குடும்ப ஆட்சி போல் இல்லாமல் மோடி, மக்களுக்கான ஆட்சியை நடத்தி வருகிறார். சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது; ஆனால் இது தற்காலிக விலை உயர்வுதான்.
டோல்கேட்டுகளின் எண்ணிக்கையை குறைக்க பல சட்ட சிக்கல்கள் உள்ளன. இதற்கு தீர்வு காணப்பட்டு டோல்கேட் எண்ணிக்கை குறைக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டதுதான். எனவே, இனி தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை’ எனத் தெரிவித்தார்.
நேற்று (ஜூலை 5) பாஜக எம்எல்ஏ நயனார் நாகேந்திரன், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டை பாண்டியநாடு, பல்லவநாடு என பிரிக்க வேண்டும்' - நயினார் நாகேந்திரன்