திருநெல்வேலி மாவட்டம், சிந்துபூந்துறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் (35), வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் உரிமையாளருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, சிவசுப்பிரமணியனுக்கு ஜூலை 7ஆம் தேதி மீனாட்சிபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜூலை 8ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று நாள்களாக படுக்கை வசதி இல்லாமல் அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில், படுக்கை வசதி செய்த நான்காவது நாள், நீங்கள் குணமாகிவிட்டீர்கள் என்று மருத்துவர்கள் சிவசுப்பிரமணியனிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிவசுப்பிரமணியன் மருத்துவர்களிடம் முறையிட்டபோது, உங்களுக்கு கரோனா பாதிப்பில்லை, தவறாக அழைத்து வந்துவிட்டோம் என மருத்துவர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன் தொற்று இருப்பதாக அழைத்து வந்ததால், அந்நிறுவனத்தில் மீண்டும் பணிபுரிய அனுமதிக்கமாட்டார்கள் என்று சிவசுப்பிரமணியன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் முறைகேடாக சிவசுப்பிரமணியன் ஜூலை 8ஆம் தேதிக்கு முன்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பத்து நாள்களாக சிகிச்சை பெற்று வந்ததாக சான்று வழங்கியுள்ளனர். ஜூலை மூன்றாம் தேதி அனுமதிக்கப்பட்டு 12ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ந்துபோன சிவசுப்பிரமணியன், தன்னை தவறாக அழைத்து சென்று முறைகேடாக கணக்கு காட்டி சிகிச்சையளித்ததால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், தனக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி மீனாட்சிபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், நெல்லை மாநகராட்சி ஆணையர், நெல்லை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் நெல்லை மாநகராட்சி மாநகர் நல அலுவலர் ஆகிய 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், உரிய பதில் அளிக்காத பட்சத்தில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!