நெல்லை: நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் பரணி நகர் விலக்கு அருகே நேற்று (ஜூலை 06) மாலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சடலமாக கிடப்பதாக பாளையங்கோட்டை போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் முதியோர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் முதியோரின் சட்டை பையில் அவரது சுய அடையாளங்கள் குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவர் யார் என கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரித்த போது சிறிது நேரத்திற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் அந்த முதியவரை அழைத்து வந்ததாகவும் அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், முதியவர் வைத்திருந்த உடைமையில் குறிப்பிட்ட ஒரு கடையின் பெயர் கொண்ட பை இருந்துள்ளது. அந்த கடையின் பெயரை விசாரித்தபோது, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த கடை என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ராஜபாளையத்தைச் சேர்ந்த போலீசார் உதவியோடு நெல்லை போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினர். அதில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர் ராஜபாளையம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து (75) என்பது தெரியவந்துள்ளது. மேலும் மாரிமுத்துவின் மகன் கடல் கன்னி என்பவர், தனது தந்தையை நேற்று (ஜூலை 06) மருத்துவ சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். சிகிச்சை முடிந்த பின் பேருந்து ஏறுவதற்காக இருவரும் வண்ணாரப்பேட்டை வந்துள்ளனர்.
அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மகன் கடல் கன்னி தந்தை மாரிமுத்துவை ஒரு தனியார் நிறுவனத்தின் கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்துச்சென்று இரண்டு கார்களுக்கு இடையே வைத்து கல்லால் தாக்கியுள்ளார். இதனால், முதியவர் மாரிமுத்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் எதுவும் நடக்காதது போன்று கடல் கன்னி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இவை அனைத்தும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தப்பி ஓடிய கடல் கன்னியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். நெல்லையில் கொடூரமாக நடைபெற்றுள்ள இந்த கொலைச் சம்பவம் நெல்லை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - வாபஸ் பெற அனுமதி கேட்ட திமுக - ஏன்?