திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரி மாதத்தில் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்போம். முதுகலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு மத்திய அரசின் 11 மருத்துவக் கல்லூரியில் சேர அவர்களே நுழைவுத்தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது விநோதமாக உள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கு தேர்வுக் கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் என்றும் முன்னேறிய வகுப்பினருக்கு ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஒரு சமூக அநீதியாகும். மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்களின் ஆலோசனையை கவனத்தில் கொண்டு மீண்டும் அந்தக் கட்டுரையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உடனடியாக அமைக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?