திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்துள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று யாசகம் பெற்று வாழ்ந்துவருகிறார். இவர், யாசகம் பெறும் பணத்தைப் பல்வேறு பள்ளிகளுக்கு லட்சக்கணக்கில் உதவிசெய்துள்ளார்.
இதன்மூலம் சமூக ஆர்வலராக அறியப்பட்ட பூல் பாண்டியன் அண்மையில், தனக்கு கிடைத்த 2.70 லட்சம் ரூபாயை கரோனா நிவாரண நிதிக்காக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.
இந்தச் சூழ்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பூல் பாண்டியன் யாசகம் பெற்று கிடைத்த 10,000 ரூபாய் பணத்தை கரோனா நிவாரண நிதிக்காக வழங்கப்போவதாகத் தெரிவித்தார்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆய்வுக்கூட்டத்தில், இருந்ததால் அவரது உதவியாளரிடம் பூல் பாண்டியன் பணத்தை கொடுத்து ரசீதைப் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து பேசிய பூல்பாண்டியன், "நான் ஆரம்பத்தில் மும்பையில் வசித்துவந்தேன். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் யாசகம் எடுத்துவருகிறேன். எனக்கு மனைவி குழந்தைகள் கிடையாது.
எனவே, கிடைக்கும் வருமானத்தை கல்விக்காகச் செலவிடுவேன். தற்போது, கரோனா காலம் என்பதால் வீடு வீடாகச் சென்றும் கடைகளுக்குச் சென்றும் யாசகம் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்.
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 2.70 லட்சம் ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கினேன். தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தில் யாசகம் பெற்று கிடைத்த 10,000 ரூபாய் பணத்தை கரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: எட்டாவது முறையாக கரோனா நிவாரணம் வழங்கிய யாசகர்!