தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மத்திய பகுதியில் அமைந்துள்ளது தட்டான்குளம். இந்த குளம் நகரின் மையத்தில் அமைந்துள்ளதால் மிகச் சிறந்த நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்தக் குளத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் குளத்து நீரை பாசனத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற நிலையில் தட்டான் குளம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குளம் முழுவதும் மாநகராட்சி பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயோடு இணைக்கப்பட்டுள்ளதால், குப்பைகள், நெகிழி பொருள்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. இதனால், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட குளம் சாக்கடை நீராக காட்சியளிக்கிறது.
நீரின் தன்மை மாறிய நிலையிலும், விவசாயிகள் பாசனத்திற்காக இந்த சாக்கடை நீரைத்தான் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் தோல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் 15 வருடங்களுக்கு முன் சுமார் 25 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயத்திற்கு பாசன நீராக விளங்கி வந்த தட்டான் குளம் சாக்கடை நீராக மாறியதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளது என்கின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருக்கும் இந்த தட்டான் குளத்தை உடனடியாக அரசு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணும் பணிகள் தாமதம் - ஆட்சியர் கந்தசாமி நேரில் ஆய்வு!