திருநெல்வேலி: சீவலப்பேரியில் புகழ்பெற்ற சுடலை மாடசாமி கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக நிலவும் பிரச்சனையில், இரு சமூகத்தினரிடைய மோதல் நீடித்து வருகிறது. மோதலின் உச்சகட்டமாக ஏற்கனவே கடந்த ஆண்டு கோவில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த 10-ம் தேதி பூசாரியின் உறவினரான மாயாண்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஒரே சமூகத்தில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் அரங்கேறியதால், நெல்லையில் குறிப்பிட்ட சமூகத்தினரிடைய பதற்றம் நீடித்து வருகிறது. மாயாண்டி கொலை வழக்கில் இதுவரை 13 பேரை மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. இருப்பினும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உரிய நிவாரணம் வேண்டும் என்பது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக அமைப்பினர் தலைமையில் உறவினர்கள் நேற்று குடும்ப அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகம் வழியாக மேலப்பாளையம் செல்லும் சாலை மூடப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
திட்டமிட்டபடி 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். அப்போது அனைவரும் திடீரென சந்திப்பு வண்ணாரப்பேட்டை பிரதான போக்குவரத்து சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள், அந்த வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்றை வழிமறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தைக்காக கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினர் மற்றும் சமுதாய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
கண்ணீர் விட்டு அழுதபடி ஆட்சியரை சந்திக்க மாயாண்டியின் குடும்பத்தினர் வந்தனர். தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் அவினாஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோரின் தலைமையில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில், மாயாண்டி மற்றும் ஏற்கனவே உயிரிழந்த பூசாரியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். அதற்கு அலுவலரகள் தற்காலிக வேலை மட்டுமே தங்களால் உடனே வழங்க முடியும், அரசு வேலை வழங்க வேண்டும் என்றால் உயர் அலுவலர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனவே தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம், அதுவரை போராட்டம் தொடரும், உடலை வாங்க மாட்டோம் என்று கூறிவிட்டு உறவினர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதுகுறித்து சமுதாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“நாங்கள் தாசில்தார் வேலையோ, கலெக்டர் வேலையோ கேட்கவில்லை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குறைந்தபட்சம் தலையாரி வேலையாவது வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கு தலைமைச் செயலாளரிடம் கேட்க வேண்டும் என ஆட்சியர் கூறினார். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் உடலை வாங்க மாட்டோம்.
நாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்றே தெரியவில்லை. இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருக்கு இந்த சம்பவம் தெரியவில்லையா, தெரிந்தும் அவர் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறாரா என தெரியவில்லை” என தெரிவித்தனர்.
ஏற்கனவே சாதி மோதலால் ஏற்பட்ட கொலையை தொடர்ந்து நெல்லையில் பதற்றம் நீடித்து வரும் சூழலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம், மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாதி மோதல் கொலைகளால் பதற்றம்...? நெல்லை விரையும் உளவுத்துறை ஏடிஜிபி