நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் அம்மன் சந்நிதி மேற்கு பிரகார கட்டுமானப் பணி, தெப்பக்குளம் புனரமைக்கும் பணிகள் மற்றும் கோயிலின் மேல் தளத்தில் ஓடுகள் அமைக்கும் பணிகள் என மொத்தம் சுமார் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய திட்டப்பணிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'இன்று அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளை ஓராண்டிற்குள் முடித்து தருவதாக டிவிஎஸ் குழுமம் உறுதி அளித்துள்ளது. மொத்த செலவையும் டிவிஎஸ் நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேபோல் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கோரிக்கையை ஏற்று இங்கு பக்தர்களின் காலணி பாதுகாப்பகம் மற்றும் பொருள்கள் பாதுகாப்பு அறைகள் 62 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். நெல்லையப்பர் கோயில் தேருக்கு கண்ணாடி அமைக்க மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்பட்டு, அடுத்த மானிய கோரிக்கையில் அந்த அறிவிப்பு வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு அறிவித்ததில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஒன்பது கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 30 கோயில்கள் 32 கோடி ரூபாயில் குடமுழுக்கு செய்யப்படும் என அறிவித்திருந்தோம். இதில் மூன்று கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
நெல்லை அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் கோயில் புனரமைப்புப் பணிக்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயிலின் திருத்தேர் செய்ய 34 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டுள்ளது. ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 1500 கோயில்கள் சுமார் ஆயிரம் கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோயில்களுக்கு திருப்பணி செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கோடி ரூபாய்க்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 40 கோடிக்கு ஒரு மாதத்திற்குள் அரசாணை வெளியிடப்படும். கன்னியாகுமரியில் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த நூறு சிறு கோயில்களைப் புனரமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நகரங்களில் உள்ள 200 சிறு கோயில்களை புனரமைக்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு கோயில்களில் குடமுழுக்கு மற்றும் திருத்தேர் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெல்லையப்பர் கோயிலில் கழிவறை அமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும். கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் பதினொன்று திருமேனி (கோயில் சிலை) பாதுகாப்பு மையங்கள் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதால், பாதுகாப்பிற்கு காவலர்களை நியமித்து திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு பதினொன்று திருமேனி பாதுகாப்பு மையங்களையும் காவல் காக்க காவலர்கள் நியமிப்பதற்கான கட்டணத்தையும் இந்து சமய அறநிலைத்துறையே ஏற்று ஒரு மாதத்திற்குள் பதினொன்று திருமேனி பாதுகாப்பு அறைகள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் கோயில் வாகனங்கள் பழுது பார்க்க மற்றும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3700 கோடி அளவில் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இடங்களை வாடகைக்கு விடும் பணிகளும் நடந்து வருகிறது. ஏற்கெனவே நிலுவையில் இருந்த வாடகை வசூல் செய்யும் பணிகளும் நடைபெறுகிறது. மேலும் பயன்பாட்டில் இல்லாத இடங்களைக் கண்டறிந்து அவற்றையும் வாடகைக்கு விட்டு வருமானத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை கும்பாபிஷேகம் நடத்த அவர்கள் அனுமதி அளித்தால் உடனே கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலைத்துறை தயாராக உள்ளது. சென்னை மழை வெள்ளப்பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் எந்த வகையான பேரிடர் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி - நெல்லை இஸ்ரோவின் சோதனை வெற்றி