நெல்லை: தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழின் செழுமைகளை உலகறியச் செய்யும் வகையில் நெல்லையில் பொருநை திருவிழா இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒளி ஒலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் ப.வா.செல்லத்துரை பேசுகையில், இலக்கிய விழா அரசு விழாவாக நடத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு விழாக்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. அந்த இடைவெளி இந்த பொருநை இலக்கிய திருவிழா மூலம் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 5 நதிகளை அடிப்படையாக வைத்து இலக்கியத்திருவிழா தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நடத்தப்படுகிறது.
இலக்கிய விழா அரசு விழாவாக மாறியுள்ளது என்றார். தொடர்ந்து சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் பேசுகையில், இந்த அரசுக்கு நன்றி கூறுகிறேன். இந்த அரசு பதவியேற்ற நாள் முதல் இலக்கிய விழா பெருநாயகன் கி.ராஜநாராயணன் மறைவிற்கு ஒரு எழுத்தாளனுக்கு அரசு மரியாதையை வழங்கி, இலக்கிய வாதிகளுக்கு கனவு இல்லம் தந்து கவுரவப்படுத்தியுள்ளது என புகழாரம் சூடினா்.
தொடர்ந்து கேரள மாநில பிரபல எழுத்தாளர் கல்பற்றா நாராயணன் பேசுகையில், அனைத்து சிறப்புகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. ஒரே ஒரு குறை உள்ளது, அது தமிழ்நாடு சாகித்ய அகாடமி விருது என்பது இல்லை என்பதுதான். தமிழ்நாட்டின் அமைச்சர்கள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்து தமிழ் சாகித்ய அகாடமியை கொண்ட விருது உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் சாகித்ய அகாடமி விருது இல்லாததால் பல தமிழ் எழுத்தாளர்களை கெளரவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலை வேதனையும் வலியையும் அளிக்கிறது. மலையாள மொழிக்கு தமிழ் மொழி தான் தாய் நாடு என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்