திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வழங்குவதற்கான ஆணை, மின்வாரியத்தில் பணியில் இருந்தபோது உயிர்நீத்தவர்களுக்கான வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணியாணை வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டார். தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திற்காக ஒதுக்கீடுசெய்யப்பட்ட 835 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பில் முதல்கட்டமாக 42 நபர்களுக்கும், அதேபோல் பணியில் இருக்கும்போது உயிர்நீத்த மின் வாரிய ஊழியர்களின் வாரிசுகள் 14 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை ஆகியவற்றை அப்பாவு வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அப்பாவு பேசுகையில், "மின் வாரியத்தில் காலியாக உள்ள ஒயர்மேன், ஹெல்பர்கள் போன்ற பணியிடங்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் விரைவில் நிரப்பப்பட உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்தடையைச் சரிசெய்ய எண்ணூர், உடன்குடி உள்ளிட்ட பல மின் திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்ததன் காரணமாகத்தான் மின்தட்டுப்பாடு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சாரம் மிகையாக இல்லாத நிலையிலும் உடனடியாக புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. பல விமர்சனங்களைத் தாண்டி திமுக ஆட்சியில் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 16 லட்சம் விவசாயிகளுக்கு மேல் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்ட போதிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டேதான் உள்ளது.
நான்கு லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர். இந்த நிலையைக் கலைந்திட திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் ஆண்டுக்கு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தயாரித்து அதனைச் செயல்படுத்திவருகிறார். மின் கட்டணத்தை உயர்த்தாமல் சாமானிய மக்கள் கேட்ட உடனே மின் இணைப்புகளை அரசு வழங்கிவருகிறது" என்றார்.