திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி சுடலை கோயில் பூசாரி சிதம்பரம் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியை சேர்ந்த நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோயில் வளாகத்தில் கடைகள் அமைப்பது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பூசாரி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த பூசாரி உடலை கோயில் வளாகத்தில் அடக்கம் செய்ய வேண்டும், அவரது குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூசாரியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே வாகை குளத்தைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் நேற்று (ஏப்ரல்.23) பாளையங்கோட்டை மத்திய சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரை சஸ்பெண்ட் செய்து, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யக் கோரியும் முத்து மனோவின் உறவினர்கள் மத்திய சிறை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதி முழுவதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், நெல்லை மாவட்ட கோட்டாட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் முத்து மனோவின் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் திருநெல்வேலியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி திருநெல்வேலிக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி கும்பல் தாக்குதல்