திருநெல்வேலி: தமிழகத்தில் சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை, திருநெல்வேலி போன்ற அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட நூறு பேருந்துகளின் சேவையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகஸ்ட் 11ம் தேதி சென்னையில் வைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நூறு பேருந்துகளும் திருநெல்வேலி கும்பகோணம், காஞ்சிபுரம் போன்ற போக்குவரத்துக் கழகங்களுக்கு தனித்தனியே தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 30 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. வழக்கமாக இதுவரை அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நீலம் பச்சை ஆகிய நிறங்களில் வண்ணம் பூசப்பட்டிருக்கும் ஆனால் தற்போது புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளில் முழுக்க முழுக்க மஞ்சள் நிற வர்ணம் அடிக்கப்பட்டு இருந்தது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடித்த நிறம். குறிப்பாக அவர் கடைசி வரை தோளில் மஞ்சள் துண்டு அணிந்திருந்தார் எனவே கருணாநிதி நினைவாகவே அரசு பேருந்துகளில் மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளதாக ஒரு வகையான கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகள் பல இடங்களில் பழுதாகி நடுவழியில் நிற்கும் சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்துகள்: அதாவது புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் 100 பேருந்துகளும் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாகப் பயன்பாட்டிலிருந்து வந்த பேருந்துகளாகும். அவற்றில் நல்ல நிலையில் உள்ள பேருந்துகளைப் புதுப்பித்திருப்பதாக அரசு கூறியது ஆனால் பெரும்பாலும் காலாவதியான பேருந்துகளே புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் விடப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. மஞ்சள் நிறத்தில் பளபளவென காட்சி அளிப்பதை வைத்தும் இருக்கைகள் கைப்பிடிகள் படிக்கட்டுகள் என அனைத்தும் புதுசாக இருப்பதால் மக்கள் இதை புதிய பேருந்து என்றே நினைத்தனர்.
ஆனால் இந்த வண்டியில் இன்ஜின் மற்றும் தொழில்நுட்ப உதிரிப் பாகங்கள் அனைத்தும் மிகப் பழையது என்பதும் வண்டியின் பாடி மற்றும் இருக்கைகள் மட்டுமே புதியது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். வண்டியின் முன்புறம் பளிச்சிடும் மின் பலகையிலான வழித்தடம் இரவில் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பேருந்து என்ற மகிழ்ச்சியோடு அதில் பயணித்த பயணிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
குறிப்பாகத் திருநெல்வேலியில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்துகள் நடுவழியில் பழுதாகி விட்டன. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் தச்சநல்லூரில் இருந்து புதிய பேருந்து நிலையத்தை நோக்கி வந்த பேருந்து வடக்கு பைபாஸ் சாலையில் பழுதானதால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பேருந்துக்கு மாற்றப்பட்டனர்.
தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 22) திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு 129 வழித்தட எண் கொண்ட புதுப்பிக்கப்பட்ட பேருந்து நெல்லை சந்திப்பு மேம்பாலம் அருகே ஸ்ரீபுரம் பேருந்து நிறுத்தம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது. இதையடுத்து அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.
குறிப்பாக தற்போது திருநெல்வேலி மாநகரில் அக்னி நட்சத்திரம் போன்று கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இது போன்ற வெயில் நேரத்தில் பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் புது பேருந்தை நம்பி சென்ற நிலையில் பேருந்து பழுதானதால் அவர்கள் கடும் வெயிலில் கீழே இறக்கி விடப்பட்டனர்
பழுதாவது ஏன்?: போக்குவரத்துக் கழகம் சார்பில், நல்ல நிலையில் இயங்கிய பேருந்துகளைத் தான் புதுப்பித்திருப்பதாகக் கூறினர். அப்படி இருக்கும்போது புதுப்பிக்கப்பட்ட பேருந்து பயன்பாட்டிற்கு விடப்பட்ட ஓரிரு நாட்களில் இதுபோன்று நடுவழியில் பழுதாகி நிற்பது ஏன் என்று ஈடிவி பாரத் சார்பில் விசாரித்த போது பெரும்பாலான பேருந்துகள் காலாவதியான பேருந்துகளைத் தான் தற்போது புதுப்பித்திருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது போக்குவரத்து விதிப்படி ஒரு பேருந்தின் ஆயுள் காலம் 12 ஆண்டுகளாகும் 12 ஆண்டுகள் கழிந்து விட்டால் அந்த பேருந்து காலாவதி ஆகிவிடும். வழக்கமாக இது போன்று காலாவதியாகும் பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்திவிட்டு அதைப் பழைய இரும்புக்கு விற்று விடுவார்கள். ஆனால் தற்போது காலாவதியான பேருந்துகளைப் பல லட்சம் செலவு செய்து புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தான் பெரும்பாலான பேருந்துகள் நடுவழியில் பழுதாகி நிற்கிறது. மேலும் இதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட பேருந்து திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருநெல்வேலி போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரை ஈடிவி பாரத் சார்பில் பிரத்தியேகமாகத் தொடர்பு கொண்ட போது, “ திருநெல்வேலி மண்டலத்திற்கு 30 பேருந்துகள் கொடுத்துள்ளனர் இந்த பேருந்துகள் அனைத்தும் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிலிருந்த பேருந்துகள் மக்கள் நலனுக்காக அதைப் புதுப்பித்து அரசு கொடுத்துள்ளது” என்று மழுப்பலாகத் தெரிவித்தார்
இது குறித்து பேருந்தில் பயணித்த வி.கே புதுரைச் சேர்ந்த கமல் கூறும் போது, “ நான் விகே புதூர் செல்வதற்காக புதிய பேருந்தில் ஏறினேன். ஆனால் வண்டி நடுவழியில் பழுதாகிவிட்டது. பார்ப்பதற்கு புது வண்டியாக இருப்பதால் ஏறினேன். ஆனால் ஏறிய பிறகுதான் அது பழைய வண்டி என்பது தெரியவந்தது. எனவே அரசு முழுமையாக புது பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இது குறித்து சுரண்டையைச் சேர்ந்த பெண் பயணி பூங்கொடி கூறும்போது, “புது பஸ் என்பதால் வேகமாகக் கொண்டு விடுவார்கள் என நம்பி ஏறினோம் ஆனால் திருநெல்வேலி தாண்டுவதற்குள் ரிப்பேர் ஆகிவிட்டது. இப்போது வெயிலில் காத்துக் கிடக்கிறோம்” என்று தெரிவித்தார்.
புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளில் நிலையைப் பார்க்கும் போது பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலின் பேமஸ் வசனமான பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெட் வீக் என்ற நகைச்சுவை காட்சி தான் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. மக்கள் சொகுசாகப் பயணிப்பதற்காகப் பேருந்துகளைப் புதுப்பிப்பது தவறு இல்லை என்றாலும் கூட நல்ல முறையில் இயங்கும் பேருந்துகளைப் புதுப்பிப்பதைத் தவிர்த்து விட்டு காலாவதியான பேருந்துகளைப் புதுப்பிப்பதால் பயணிகளுக்கு இதுபோன்று இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாமல் அரசு பணம் வீண் விரயமாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடுவக்குறிச்சியில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் - போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு!