நெல்லை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி நெல்லை சாந்தி நகரில் அமைந்துள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 3ஆம் தேதி அன்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாநில மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள், ஆயுதப்படை வீரர்களின் வாரிசுகள், தேசிய மாணவியர் படையில் சேர்ந்து விளங்கும் மாணவிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கும், இன்று இளங்கலை (பிஏ) தமிழ், ஆங்கிலம் மற்றும் வணிகவியல் பாடத்திற்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
தொடர்ந்து நாளை இளமறிவியல் (பி.எஸ்சி) கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவிற்கும் நாளை மறுதினம் இளமறிவியல் (பி.எஸ்சி) தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் புவியமைப்பியல் பாடப்பிரிவிற்கும் வரும் 11ஆம் தேதி இளங்கலை (பிஏ) வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவிற்கும் 12ஆம் தேதி இளங்கலை (பிஏ) மனித வள மேம்பாடு, சமூகவியல் மற்றும் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் பாடப் பிரிவிற்கும் அடுத்தடுத்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக்கணக்குப்புத்தகம் இவற்றின் உண்மைச்சான்றிதழ்களுடன், நகல் 5 பிரதிகள், நிழற்படம் 5 பிரதிகள் எடுத்துக்கொண்டு தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொள்ள வேண்டும் என ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த மாணவர்கள் அனைத்து ஆவணங்களுடன் காலை முதலே ஆர்வமுடன் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு மதிப்பெண் மற்றும் தரவரிசை அடிப்படையில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு ஒதுக்கப்படயிருக்கிறது.
இதையும் படிங்க:நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 7.2% ஆக நீடிப்பு