வங்கக் கடலில் உருவான புரெவி புயல் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டது.
இருப்பினும் நெல்லை மாவட்டத்தில் இன்று மாலை வரை கனமழை எதுவும் பெய்யவில்லை. அதே சமயம் இரண்டு நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு, லேசான தூரல் மட்டுமே இருந்து வந்தது.
இந்நிலையில் நெல்லையில் இன்று இரவு திடீரென பல்வேறு இடங்களில் கனமழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக நெல்லை மாநகர் பகுதிகளான டவுன் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர், சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், சுத்தமல்லி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைகுறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது.
சுமார் 40 நிமிடம் இடைவிடாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழையால் மாநகர் பகுதியில் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, கடலோரப் பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். அதேபோல் மாவட்டம் முழுதும் உள்ள அணைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு சிறப்புக் குழுவினர் பணி அமர்த்தப்பட்டனர்.
மேலும் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கருணாகரன் தொடர்ந்து 2 நாள்களாக நெல்லையில் தங்கியிருந்து, பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து வந்தார்.
மழை பெய்யாததால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்த நிலையில் இன்று பெய்த கனமழையால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் படுகாயம்