மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கில படத்தின் மூன்றாவது பருவத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ என்ற கட்டுரை நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அந்த பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராய் கட்டுரையை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், அருந்ததி ராயின் கட்டுரையை பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று (நவ.18) மனோன்மணியம் பல்கலைக்கழகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். இதையொட்டி பல்கலைக்கழக நுழைவு வாயிலில் இன்று காலை முதல் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இருப்பினும் திட்டமிட்டபடி மாணவர் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கையில் கொடிகளை ஏந்தியபடி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்களை பல்கலைகழகத்தின் உள்ளே விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 10 பேரை மட்டும் துணைவேந்தரை சந்திக்க காவல் துறையினர் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து துணைவேந்தர் பிச்சுமணியிடம் மாணவர் அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை முடியும் வரை மாணவர்கள் கலைந்து செல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளதால்,தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.