நெல்லை: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கிய நகரங்களில் விமானம் மூலம் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழில், வியாபாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிக்களுக்காக அங்கு வசித்து வருகின்றனர். தற்போது அவர்களுடைய நிலைமையும் கேள்விக்குறியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும் மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர் .
பல்வேறு நகர்பகுதியில் குண்டுகள், ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால் அங்குள்ள மாணவர்கள் அச்சம் அடைந்ததுள்ளனர். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தைத் தொடர்புகொண்டு அங்குள்ள நிலை குறித்து பேசிவருவதுடன் தாங்கள் உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதாகவும் உருக்கமுடன் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் ஒரு மாணவி சிக்கித் தவிப்பு
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மனோ ஜெபத்துரை என்ற மாணவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் முதலாம் ஆண்டு பயின்று வரும் நிலையில், அவரை மீட்டுத்தரக்கோரி அவரது பெற்றோர்கள் அரசுக்கு ஏற்கெனவே கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவி உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிப்பது தெரியவந்துள்ளது.
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் - உமா தம்பதியின் மகள் தீபாஸ்ரீ, உக்ரைனில் உள்ள கர்கிவ் சர்வதேச மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த பிப்.6ஆம் தேதி தான் தீபாஸ்ரீ உக்ரைன் சென்றுள்ளார். அங்கு சென்ற 20 நாளிலையே மிகப்பெரிய இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மாணவி தீபாஸ்ரீ-இன் பெற்றோர்கள் தனது மகளை பத்திரமாக மீட்டுத்தரக் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:புடின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்