திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பகுதிகளுக்கு திருநெல்வேலியில் இருந்து நான்குநேரி வழியாக நாகர்கோயில், கன்னியாகுமரி செல்லும் அரசு பேருந்துகள் நான்குநேரி ஊருக்குள் செல்லாமல் நேராக பைபாஸ் வழியாக செல்வதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து கிடைக்காமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இதுதொடர்பாக பேருந்து நடத்துநர்களிடம் பொதுமக்கள் அவ்வப்போது வாக்குவாதம் செய்யும் சம்பவங்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மண்டல இணை ஆணையருக்கு மக்கள் புகார் அளித்தனர். அவர் அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் சென்றுவருமாறு இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், மீண்டும் பேருந்துகள் ஊருக்குள் வராததால் நான்குநேரி நுகர்வோர் பேரவையை சேர்ந்த சுப்ரமணியன், தன்னை நடுவழியில் நடத்துனர் இறக்கி விட்டதாக கூறி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு நாகர்கோவில் போக்குவரத்து கிளை மேலாளர் சுப்ரமணியன் கொடுத்துள்ள எழுத்துப்பூர்வமான பதில் கடிதத்தில், ‘மனுதாரரின் புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு நான்குநேரி ஊருக்குள் 4.76 நிமிடத்துக்கு ஒருமுறை நான்குநேரியில் இருந்து நெல்லை மற்றும் நாகர்கோயிலுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 1 to 1 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனாலேயே இந்த பகுதியில் பேருந்துகள் பைபாஸ் வழியாக இயக்கப்பட்டன என்று குறிப்பிட்டிருந்தார். இதனை நெட்டிசன்கள் முதலமைச்சரே பேருந்தை நிறுத்த சொன்னதுபோல கடிதம் இருப்பதாக கிண்டல் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:நான் நேரடி அரசியலுக்கு வந்த பின் கட்சி வளர்ச்சியடைந்துள்ளது - துரை வைகோ