நெல்லை: ஜாய் என்ற இளைஞர் தனது 8 வயதில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து தப்பிய ஜாய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அங்குள்ள மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி மனு கொடுத்து வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக ஜாயை இலங்கைக்கு அனுப்பும்படி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் மீது வழக்குகள் இருந்ததால், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் ஜாய் இன்று(பிப்.21) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்றபோது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்ப முடியாது, வேண்டுமானால் வேறு ஒரு அதிகாரியிடம் தெரிவியுங்கள் என கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக் கண்டு அவரை தடுத்த போலீசாரிடமும் வாக்குவாதம் செய்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, கண்ணாடியால் கழுத்தை அறுத்துக் கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். அவரை தடுத்த காவலர் சண்முகவேல் கையில் காயம் ஏற்பட்டது.
பின்னர் ஜாய் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றார். அப்போது பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சுற்றிவளைத்து அவரை தடுத்தனர். தான் குற்றவாளி இல்லை என்றும், தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்கக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், போலீசாரும் அதிகாரிகளும் தன்னை அலைக்கழிப்பதாகவும் ஜாய் கண்ணீர் மல்க புலம்பினார். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: விஐபிக்களிடம் திருடி ஏழைகளுக்கு உதவி: "ராபின் ஹூட்" கொள்ளையனை தேடும் போலீசார்!