வங்கக்கடலில் உருவாகியுள்ள ’புரெவி’ புயல் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. எனவே வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் புயல் மீட்புப் பணிகளுக்கான சிறப்பு அலுவலராக கருணாகரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று (டிச.02) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தச் சூழ்நிலையில் சிறப்பு அலுவலர் கருணாகரன் ,நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சென்னை மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் இன்று (டிச.03) பாளையங்கோட்டையில் உள்ள பாளையங்கால்வாயில், நெல்லை சந்திப்பு சிந்துப்பூந்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டுள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகளை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றும்படி பொதுமக்களிடம் சிறப்பு அலுவலர் கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அலுவலர் கருணாகரன் ஐஏஎஸ், "நெல்லை மாவட்டத்தில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் அனைத்து அணைகள், குளங்கள், ஏரிகள், நீர் இருப்பு ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பாளையம் கால்வாய், தாமிரபரணி ஆறு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் எதுவும் இல்லை. மாஞ்சோலை மலைப்பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் அங்குள்ள மக்களைப் பாதுகாக்க தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் மழையால் சாய்ந்த 917 மரங்கள்