தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலால் ஏற்படும் உயிரிழப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த இரண்டு தினங்களாக தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறன. ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மக்களின் சிரமத்தைப் போக்க, நேரடியாக மக்களை தேடி முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருநெல்வேலி மாநகர, மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம், இன்று (மே.28) பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
நெல்லை சரக டிஐஜியும், மாநகர காவல் ஆணையருமான (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபு சிறப்பு தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு பேசினார். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்களும் தடுப்பூசியின் பலன்கள் குறித்து காவலர்களின் குடும்பத்தினருக்கு எடுத்துக் கூறினர்.
பின்னர் ஏராளமான காவலர்களின் குடும்பத்தினர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஏழாயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதையும் படிங்க : கரோனா 2ஆவது அலையில் நுரையீரல் பாதிப்புகள் எப்படி இருக்கும்?