திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதி பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (ஜூன் 16) முதல் 31.10.2023 வரை 150 கன அடி தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதன் மூலமாக, நெல்லை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரத்து 597 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயன்பெறும்.
52 குளங்கள் மூலமாக மறைமுகமாக 1,013 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் அடிபடையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பாசனத்திற்கு அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகர் கால்வாயில் இருந்து 150 கன அடி தண்ணீரை, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது அமைச்சரவைக்கு யார் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும்? என முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குதான் உள்ளது என்றார். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற கடிதத்தை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அத்தகைய செயலை அவர் தவிர்த்திருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை
தொடர்ந்து பேசிய அவர், "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நிலை சரியில்லை; நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நீதிமன்ற காவல் வழக்கு நிலுவையில் இருப்பதால் அமைச்சர் பதவில் இருக்கக்கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும் தான் பதவியில் இருக்கக்கூடாது. தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். இந்திய சட்டத்தில் மதச்சார்பற்ற நாட்டை அவர் விழிப்படையாவிட்டால், இது மதச்சார்புடைய நாடாக மாறிவிடும்" என சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், "அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்ட சம்பவமும் முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்றார். ஏற்கனவே, மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பதாகாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது போன்று நிலையில் தமிழ்நாடு ஆளுநர், அமைச்சரின் இலாகா மாற்ற கடிதத்தை திருப்பி அனுப்பியது தமிழ்நாடு அரசியலில் மேலும் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், அமைச்சரின் இலாகா மாற்றும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு என்றும் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி எந்த தவறும் செய்யவில்லை என முதலமைச்சரால் கூற முடியுமா? - வானதி சீனிவாசன் கேள்வி