திருநெல்வேலி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று (டிச.2) தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமண ஆணையை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு மூன்று முறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்கள் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுகின்றனர்.
இடைத்தரகர்கள் மூலம் மிரட்டல் விடும் மத்திய அரசின் ED&IT: மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மத்திய அரசின் மனநிலை தெரிந்து கொண்டு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை குறிவைத்து அவர்களுக்கு முதலில் நூல்விடுவது, பிறகு இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டி பேசுவது, பின்னர் குறிப்பிட்ட தொகையை வாங்குவது இப்படித்தான் நடந்நு வருகிறது.
என்னிடமும் கூட கடந்த மூன்று மாதமாக இடைத்தரகர்கள் பல பேர் பேசினார்கள். நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேல இருக்கிறவர் பார்த்துக் கொள்ளுவார் என்றேன். மத்திய அரசு மூலம் உங்களிடம் பிரச்சனை செய்ய சொல்லி இருக்கிறார்கள் என இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள். ஊரை விட்டு எல்லாம் போகச் சொன்னார்கள். செல்போன் என்னை மாற்ற வேண்டும் சொன்னார்.
நிறுவனங்களின் கடனை அடைத்து விவசாயிகளின் கடனை அடைக்க தவறிய மத்திய அரசு: மின்வாரியத்தில் நிலக்கரி வழங்கியதில் 800 கோடி அளவிற்கு நடைபெற்ற இழப்பு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் 25 லட்சம் கோடி அளவிற்கு 500 முதல் 1000 பெரும் நிறுவனங்கள் வாங்கிய கடனை ரைட் ஆஃப் ( கடன் கணக்கை நீக்கியுள்ளது) செய்துள்ளது மத்திய அரசு. ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. என்னைப் போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலம் மிரட்டல் விடுத்து வருகிறது.
அரசியலமைப்பு சாசனம் சொல்வதையும் மறுத்து வரும் தமிழ்நாடு ஆளுநர்: ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சாசனம் 91-ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆறு வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால் ஆளுநர் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ, எவ்வளவு கிடப்பில் போட முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்.
உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். மதச்சார்பின்மை நாடு என்று அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் மதச்சார்புடைய நாடு இந்தியா என பேசி வருகிறார்" என்று கூறினார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று அண்ணாமலை பேசிய விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, அண்ணாமலை அவரைக் குறித்து அவரே இந்த கருத்தைச் சொல்லி இருக்கிறாரா என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "மக்களவைத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் கட்சியாக அதிமுக இருக்கும்" - மாஜி அமைச்சர் செங்கோட்டையன்!