திருநெல்வேலி: நெல்லையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. 9 சம்பவங்களையும் நிகழ்த்தியது பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள்தான்.
தங்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு குண்டு வீச்சு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். ஆளுநர் மாளிகை அருகே 10வதாக சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது. ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசிய சம்பவத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார்கள் என்றால், அது நடக்காது. ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் விவகாரத்தில், பாஜகவினர் இரு பிரிவுகளாக செயல்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தமிழ்நாட்டில் வன்முறை சம்பவங்களை துடித்துக் கொண்டிருப்பவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். இங்கு ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர், புட்டப் கேஸ் செட்டப் கேஸ் அதெல்லாம் போட வேண்டும் என தீவிரமாக இருக்கிறார்கள், அது தமிழ்நாட்டில் நடக்காது. ஆளுநர் மாளிகை அருகே வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தமிழக போலீசார் முறையாக விசாரித்தால் உண்மையைச் சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில், சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் எனத் தோன்றுகிறது” எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்து வருவது குறித்த கேள்விக்கு, “அரைகுறை படிப்பு ஆல்வேஸ் டேஞ்சர், அதுதான் ஐயா ஆளுநர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜக பிரமுகரா? பகீர் கிளப்பும் திமுக ஐடி விங்!