திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த சுப்பையா, பழமைவாய்ந்த சுடலைமாட சுவாமி கோயிலில் பூசாரியாக இருந்தார். இவரைக் கடந்த 18ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, கோயில் அருகே அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளது. பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சீவலப்பேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 12 பேரைக் கைது செய்துள்ளனர். சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றங்கரையில் உள்ள சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழாவில் கடைகள் அமைப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இறந்த பூசாரியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், சிதம்பரம் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.20 லட்சம் பணமும், கோயில் அருகே சிதம்பரத்தின் உடலைப் புதைக்க அனுமதியும் வேண்டும் என கடந்த 6 நாட்களாக அவரது உடலை வாங்காமல் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று(ஏப்.24), மீண்டும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள அழகுமுத்துக்கோன் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு நபர், வீரன் அழகு முத்துக்கோன் சிலை மீது ஏறி கழுத்தில் அரிவாளை வைத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். பின்னர் அவரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது சுமுக உடன்பாடு எட்டப்பட்டு பூசாரி உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர்.
உடலைப் பெற்றுக் கொண்டு ஊர்வலமாகச் சென்ற போது பாளையங்கோட்டை கக்கன் நகர்ப் பகுதியில் அரசு பேருந்து மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிதம்பரம் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள், கோயில் அருகிலேயே அடக்கம் செய்தனர்.
சீவலப்பேரி சுடலை கோயிலில் கடைகள் அமைப்பது தொடர்பாக யாதவர் மற்றும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா உயிரிழப்பு: ஆம்புலன்சிலிருந்து கீழே விழுந்த உடல்... ஷாக்கிங் வீடியோ!