நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதியன்று தமிழர் அமைப்புகள், வழகறிஞர்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் அவர் பேசியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அதே மாதம் 22ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் அடுத்த இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணைக்காக ஜேஎம் 1 நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜரானார். அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னை நீண்ட காலம் சிறையில் அடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கு திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்டதாகவும், இது முழுக்க முழுக்க புனையப்பட்ட வழக்கு எனவும் தெரிவித்தார்.