திருநெல்வேலி: வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் 29 மாணவ, மாணவிகள், ஐந்து ஆசிரியைகள், ஒரு உதவியாளர் ஆகியோர் தனியார் பள்ளி வேனை வாடகைக்கு எடுத்து திருநெல்வேலி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்று உள்ளனர்.
வேன் திருநெல்வேலி நகர் பகுதியில் உள்ள மாவட்ட தொழில் மையம் அருகே வந்தபோது ஒரு திருப்பத்தில் திரும்பி உள்ளது. அப்போது வேனின் பின்பக்க ஆக்சில் முறிந்து வேன் சாலையின் வலது பக்கம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், உதவியாளர் மற்றும் வேனை ஓட்டி வந்த டிரைவர் தங்கமுத்து உள்ளிட்ட 36 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக வேனில் இருந்த குழந்தைகளை மீட்டனர். மேலும், அவ்வழியாக பணிக்குச் சென்று கொண்டிருந்த பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன் தனது வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளை உடனடியாக மீட்டு தனது வாகனத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாகவும், தீயணைப்பு வாகனம் மூலமாகவும் குழந்தைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒரு சில குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் காயம் அடைந்தோருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி தலைமையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி கோட்டாட்சியர் கார்த்திகாயினி மற்றும் காவல்துறை துணை ஆணையர் அனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பள்ளிக் குழந்தைகள் வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அரசு வகுத்துள்ள விதிமுறைகள் எதுவும் இந்த வாகனத்தில் இல்லை எனக் கூறப்படும் நிலையில், இந்த வாகனத்திற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: Madurai Train Fire : சுற்றுலா ரயிலில் திடீர் தீ விபத்து... 2 பயணிகள் பலி!