விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் பரப்புரை இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இதனால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரையின்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய சரத்குமார், கடைக்கோடி தொண்டனுக்கும் மரியாதை கொடுக்கும் ஒரு கட்சி என்றால் அது அதிமுக கட்சிதான் என பெருமையுடன் பேசினார்.
கடந்த 10 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவுடன் தொடர்ந்து பயணித்து வருவதாக தெரிவித்த அவர், மக்களைப் பற்றி சிந்திக்கிற ஒரே கட்சி அதிமுக கட்சி என்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் கருவுற்ற பெண்கள் மகப்பேறுக்கு சிறப்பாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது என்றும் கூறினார்.
இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்து, நாளை மறுநாள் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.