திருநெல்வேலி: நெல்லையின் மாநகரப் பகுதிகளான டவுன் காட்சி மண்டபம், நெல்லை சந்திப்பு, ஸ்ரீபுரம், ஊருடையார் புரம், நயினார்குளம் ஆகிய பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவருகின்றன.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு விபத்துகள் நிகழ ஏதுவாக அமைந்துள்ளன. தொடர்ந்து சில நாள்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் நகரின் சாலைகள் இன்னும் மோசமடைந்துள்ளன.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் சாலைகளைச் சீரமைக்கக் கோரி மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நேற்று (நவம்பர் 23) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்டமாக உள்ளிருப்புப் போராட்டம்
அப்போது ஏற்கனவே தங்களுடன் எடுத்துவந்திருந்த சேற்றை உடம்பில் ஊற்றிக் கொண்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் சேற்றுடன் சென்று ஆட்சியரைச் சந்திக்க வேண்டும் என, இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து மாரியப்பன் பாண்டியன் செய்தியாளரிடம் பேசுகையில், “திருநெல்வேலி மாநகரச் சாலைகள் படுமோசமாகக் காட்சியளிக்கின்றன. இந்தச் சாலைகளால் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். இது சாலைகள் அல்ல, மரண குழிகள்.
இதனைப் பயன்படுத்தும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் என யாரும் சாலைகளின் நிலை குறித்து கண்டுகொள்வதில்லை. பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், சேறு குளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
இதையும் படிங்க: Rowdy baby surya-வைக் கைது செய்... இளம்பெண் குமுறல்