திருநெல்வேலி: முன்னீர்பள்ளத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 16) இரவு கால்வாயில் குளிக்கச் சென்ற பாலமகேஷ் என்ற இளைஞரை முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. பாலமகேஷ் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமகேஷ் தரப்பினர் எதிர் தரப்பினரின் வீடு, வாகனங்களைச் சேதப்படுத்தி வைக்கோல் படப்புக்குத் தீவைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (ஜூன் 17) காலை இருதரப்பினரும் தங்கள் பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன், "இருதரப்பினரிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சம்பவம் தொடர்பாக சிசிடிவி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் குற்றவாளிகளைக் கைதுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என உத்தரவாதம் அளித்தார்.
அதன்பேரில் தற்போது இரு தரப்பினரும் கலைந்துசென்றுள்ளனர். சாதி மோதல் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டபோது காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நம்மிடம் கூறுகையில், "முன்னீர்பள்ளம் விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக மொத்தம் மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வீடு, வாகனங்களைச் சூறையாடிய 22 நபர்கள் மீதும், பாலமகேஷை அரிவாளால் வெட்டிய ஆறு நபர்கள் மீதும் தனித்தனியே வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Battlegrounds Mobile India: முகத்தில் மரு வைத்து வரும் பப்ஜி!