கோயம்புத்தூர்: கோவை தொண்டாமுத்தூர் அருகே உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொண்டாமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், ராஜராஜேஸ்வரி நகர்ப் பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வாகனங்களில் நின்று கொண்டிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.
இந்த விசாரணையின்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாகவும், இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் தடை செய்யப்பட்ட உயர் ரக போதைப் பொருட்கள், கஞ்சா, குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அலைத்து சென்று விசாரணை செய்த போது, பிடிபட்ட நபர்கள் கோவை பி.என்.புதூரைச் சேர்ந்த அமரன் (30), பெங்களூரைச் சேர்ந்த ஜனாதன் சதீஷ் (31), ஆலந்துறையைச் சேர்ந்த பிரசாந்த் (30), சரவணகுமார் (26) மற்றும் சாய்பாபா காலனியைச் சேர்ந்த நிஷாந்த் (23) என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை காளான் மற்றும் கஞ்சா குட்கா பொருட்களை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்ததாகவும், இதன் அடிப்படையில் ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 12.90 லட்சம் மதிப்பிலான 589 கிராம் போதை காளான், ஒரு கிலோ கஞ்சா, 13 கிலோ குட்கா மற்றும் ஆறு செல்போன், பணம் என்னும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பிடிபட்ட 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் பண மோசடி: சுமார் ரூ.1 கோடி சுருட்டிய, 6 பேரைக் கைதுசெய்த சைபர் கிரைம் காவல்துறை!
இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பது குறித்து தொடர்ச்சியாக திடீர் சோதனை நடத்தி வருகிறோம். கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள பெட்டிக்கடைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை யாரேனும் விற்பனை செய்தால் அவர்கள் குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தெரிவிப்பவர்கள் குறித்த தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளதால் அங்கு பயிலும் மாணவர்கள் வெளியிடங்களில் வீடுகள் எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வருபவர்களின் அறைகளை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். அந்த சோதனையில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் வைக்கப்பட்டிருந்தால் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இது குறித்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
இதுமட்டும் அல்லாது, உடன் தங்கி படிக்கும் மாணவர் யாரேனும் போதை வஸ்துக்களை பயன்படுத்தினால் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், இந்த போதை காளான் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யாருக்கெல்லாம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்