திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) நடந்தது. இக்கூட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையேற்றார்.
மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களிலும் வருவாய்த் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்தும், அதற்கான ஆவணங்களின் நிலை குறித்தும் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின்கீழ் மூன்று மாவட்டங்களிலும் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டவற்றிற்கு, அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காட்டுநாயக்கர் சமுதாயத்தினருக்குப் பல ஆண்டுகளாகச் சாதிச்சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கு அமைச்சர் சாதிச் சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் 43 ஆயிரத்து 803 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 13 ஆயிரத்து 462 மனுக்களுக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.
பட்டா வழங்குதல் சர்வே செய்வதில் இருக்கும் தாமதத்தை உடனடியாக நிவர்த்திசெய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டாலும்கூட அதற்கான வருவாய்க் கோட்டங்கள் பிரிக்கப்படாமல் இருக்கின்றன.
கிராம உதவியாளர் பணியிடங்கள்
அதற்கான தகுந்த ஆணையை விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார். வருவாய்த் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி-க்கு கடிதம் அனுப்பியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள மூன்றாயிரம் கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
சர்வே செய்யப்படாத இடங்களில் நீதிமன்ற ஆணைப்படி லைசென்ஸ் (உரிமம் பெற்ற) சர்வேயர் மூலம் அளவீடு செய்து மனு கொடுத்தால், பத்து நாள்களுக்குள் வழங்கப்படும். இலவச பட்டாக்கள் வழங்கும்போது சர்வே செய்து அவர்களுக்கான இடங்களை அடையாளம் காட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தபின் பட்டா மாறுதல் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதி இல்லாத இடங்களை வாங்க வேண்டாம் எனத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுக்குத் தேவையான நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்யக்கூடாது என அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையில் விதிமீறல்: திமுக எம்எல்ஏவுக்கு செக்?