திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு தங்கம்மன் கோயிலில் கடந்த மார்ச் 12ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்றபோது கோயில் வளாகத்திற்குள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையை கோயில் நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் கந்தப்பன், காவல் துணைக் கண்காணிப்பாளர் சுபாஷினி உள்ளிட்டோர் அரசின் உரிய அனுமதியின்றி முத்துராமலிங்கத் தேவர் சிலை வைத்துள்ளதால் அதனை அகற்ற வேண்டும் எனக் கோயில் நிர்வாகிகளிடம் கூறினர்.
நாளை மாலை 5 மணிக்குள் கோயில் நிர்வாகத்தினர் அந்தச் சிலையை அகற்றாவிட்டால் அரசு சார்பில் அகற்றப்படும் என எச்சரித்தனர். இதற்கு கோயில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி பெற்றுவரும்வரை அலுவலர்கள் சிலையை அகற்றக்கூடாது. அதுவரை சிலையை மூடி வைத்திருக்க அனுமதிக்க வழங்க வேண்டும் எனக் கோயில் நிர்வாகிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை அகற்றம்!