கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுபடுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. நீண்ட நாட்கள் ஊரடங்குக்கு பிறகு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது.
வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, இணையதளம் வழியாக கல்வி கற்பது என சிலர் இச்சூழலை தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைத்துள்ளனர். ஆனால் கடுமையான உடற்பயிற்சி மூலம் தங்கள் இலக்கை அடையும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு இந்த சூழல் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, நீச்சல் விளையாட்டுப் பிரிவை சேர்ந்தவர்கள் இதனால் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
ஒரு சில விளையாட்டுக்கு வீட்டில் இருந்து பயிற்சி மேற்கொள்ள முடியும். ஆனால், நீச்சல் அப்படியல்ல, நீச்சல் வீரர்கள், வீரங்கனைகள் அரசு சார்பில் உள்ள நீச்சல் குளங்களை நம்பியே உள்ளனர். மற்ற விளையாட்டுகளில் இருந்து மாறுபடும் நீச்சல் விளையாட்டுக்கு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டிய தேவையுள்ளது. இந்தக் கரோனா பிரச்னை காரணமாக அனைத்து விளையாட்டு மைதானங்களும், நீச்சல் குளங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் நீச்சல் பயிற்சியை முறையாக செய்ய முடியாமல், அவர்கள் உடல் தகுதியை சீராக வைப்பதற்கு முடிந்த உடற்பயிற்சியை செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், நீச்சல் போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்ற நெல்லை கல்லூரி மாணவி தேவி மகராசியிடம் இதுகுறித்து கேட்டோம். அதற்கு அவர், நீச்சல் குளங்களில் செய்யப்படும் பயிற்சிதான் கைகொடுக்கும், 40 நாட்களுக்கு மேலாக பயிற்சி செய்யாதது வருத்தமாக உள்ளது. 15 நபர்களையாவது தினமும் நீச்சல் பயிற்சி செய்ய அனுமதிக்கலாம், நீச்சல் குளங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதால் வைரஸ் பரவல் இருக்காது என்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் நீச்சல் போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்ற சிலர் உள்ளதாகவும், அவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை மட்டுமாவது பயிற்சிகள் பெற அனுமதிக்குமாறும் தமிழக நீச்சல் கழக இணைச் செயலாளர் திருமாறன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
முறையான நீச்சல் பயிற்சி இல்லாவிட்டால், நமது போட்டியாளர்கள் வெற்றியை அடைவது கடினம். எனவே குறைந்த அளவு வீரர்களையாவது, மருத்துவர்களின் ஆலோசனையுடன் நீச்சல் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்பதே நெல்லை மாவட்ட நீச்சல் வீரர்கள், வீராங்கனைகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:‘கிரிக்கெட்டைவிட கால்பந்தில்தான் அதிக ஆர்வம்’ - ரோஹித் சர்மா!