திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மணப்படை வீடு பகுதியைச் சேர்ந்தவர் சுருளி ராஜன் (42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது, ஏற்கனவே கொலை வழக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (டிச.6) பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், காரை மடக்கி சுருளி ராஜனை சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளனர்.
அதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சுருளி ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறை அதிகாரிகள், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, கொலை தொடர்பான விசாரணையை காவல் துறையினர் தொடங்கினர். மேலும் திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையர் ஆதர்த் பச்சேரா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: நெல்லையில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி படுகொலை.. போலீசார் தீவிர நடவடிக்கை!
இக்கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட சுருளி ராஜன் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்று இருக்கலாம் என்கிற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பட்டப் பகலில் திருநெல்வேலி-தூத்துக்குடி இடையேயான நெடுஞ்சாலையில், அரசு சட்டக் கல்லூரி மற்றும் நீதிமன்றம் அருகே உள்ள பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை நடைபெற்ற இடத்தின் அருகே கல்வி நிறுவனங்களும், அலுவலகங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அண்மையில், திருநெல்வேலி அடுத்த ராஜவல்லிபுரத்தில் நடந்த கொலை சம்பவம், பிரஞ்சாரி அருகே நடந்த சந்தேகத்திற்குரிய மரணம் என்று தொடர்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் காதலை கைவிட மறுத்த இளம்பெண் ஆணவக் கொலை.. தம்பி செய்த வெறிச்செயல்!