தமிழ்நாட்டில் வரும் 7ஆம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்னக ரயில்வே சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் 13 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு ரயிலும், சென்னை - தென்காசிக்கு வாரத்துக்கு மூன்று ரயில்கள், சென்னை - தூத்துக்குடி வரை ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (செப்டம்பர் 5) காலை முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையொட்டி, திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் பொதுமக்கள் இன்று காலை முதல் பல்வேறு ஊர்களுக்கு முன்பதிவு செய்தனர்.
பெரும்பாலானோர் சென்னை, தாம்பரம் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு செய்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ரயில் இயக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் ரயில் இயக்கப்படுவதால் நிம்மதி ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பாலகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், "எனது மகள் மற்றும் பேத்தி சென்னை தாம்பரத்தில் வசித்து வருகின்றனர். ரயில்கள் ஓடாததால் கடந்த மூன்று மாதமாக அவர்களை பார்க்க முடியவில்லை. தற்போது ரயில்கள் இயக்கப்படுவதால், வருகின்ற 7ஆம் தேதி எனது மகளை பார்க்க தாம்பரம் செல்கிறேன். அதற்காக தற்போது முன்பதிவு செய்துள்ளேன். ரயில் ஓடாததால் மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது" என்றார்.
அதேபோன்று மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கூறுகையில், எனது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறான். கடந்த சில மாதங்களாக ரயில்கள் இயங்காததால் அவனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. தற்போது ரயில்கள் இயக்கப்படுவதால் எனது மகன் வருகின்ற 9ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு செல்கிறான்" என்றார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யை புகழ்ந்து தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு