2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் 203 அஞ்சல் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் இறுதி மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்படவேண்டிய நிலையில் தான் வெளியேற்றப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், அஞ்சல் வாக்குகளை திரும்பவும் எண்ண உத்தரவிட்டதோடு அஞ்சல் வாக்குகளையும் அத்தொகுதியின் பிற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 4ஆம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ராதாபுரம் சார்நிலைக் கருவூலத்தில் வைக்கப்பட்டிந்த அஞ்சல் வாக்குகளும் ராமையன்பட்டி அரசுக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில், தனி வாகனத்தில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சென்னை வந்தடைந்ததும் உயர் நீதிமன்ற பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் எண்ணப்படும் என்று கூறப்படுகிறது.