திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள புகழ்பெற்ற சுடலைமாட சுவாமி கோயிலில் கடைகள் அமைப்பது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே நேற்று (ஏப்.19) மோதல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த சிதம்பரம், நடராஜ பெருமாள் ஆகிய இருவரையும் அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடினர்.
இதில் சிதம்பரம் சிகிச்சைப் பலனின்றி நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். நடராஜ பெருமாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். உயிரிழந்த சிதம்பரத்தின உடல் உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு பொதுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்யக்கோரியும், உயிரிழந்த சிதம்பரத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் அவரது உறவினர்கள், குடும்பத்தினர், பொதுமக்கள் நெல்லை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையின் நடுவே அமர்ந்து கோஷம் எழுப்பிவருகின்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினர் அவர்களைச் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணும் மையம் அருகே தானாக இயங்கிய கணினி: கரூரில் பரபரப்பு