தமிழ்நாடு சட்டப்பேரவை இறுதி கூட்டுத்தொடரில் 110 விதியின் கீழ் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சில சமூதாய அமைப்புகள் தங்களுக்கும் சலுகை வழங்ககோரி ஆங்காங்கே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள முருகன்குறிச்சி பகுதியில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் தெருக்கள், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தில் சீர்மரபினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என பகிரங்கமாக தெரிவித்தனர்.