தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். இந்தச் சூழலில் நெல்லை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை முதல் காணொலிக் காட்சி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்ட சூழ்நிலையில், கரோனா தடுப்புப் பணிகளால் தொடர்ந்து கூட்டம் நடத்த இயலவில்லை. இந்நிலையில், வரும் மூன்றாம் தேதிமுதல் காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் அந்தந்த அலுவலகங்களில் இருந்தபடியே பங்கேற்பார்கள். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் https://tirunelveli.nic.in என்ற இணையதள முகவரி பக்கத்தில் "காணொலிக் காட்சி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம்" என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும்.
பின்னர் உங்கள் பெயர், ஊர் ஆகியவற்றைப் பதிவுசெய்து காணொலிக் காட்சிக்குள் நுழைந்தவுடன் உங்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும். பெயரை அழைக்கும்போது கைபேசி வாயிலாக ஆட்சியரிடம் உங்களது கோரிக்கை குறித்து சுருக்கமாக தெரிவிக்கலாம்.
பின்னர் உங்கள் கோரிக்கையை ஆட்சியர் காணொலிக் காட்சி வாயிலாகவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார். பொதுமக்கள் இந்தக் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.