திருநெல்வேலி: திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக காளிமுத்து என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் இறந்த பிறகு அவருடைய வேலை கருணை அடிப்படை சட்டத்தின்கீழ், அவருடைய மனைவிக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அப்பெண், திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
அங்குள்ள பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளராக நவராஜ் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் தூய்மைப் பணியாளரான அப்பெண்ணுக்கு ஆபாசமாகப் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லை காவல் துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட அப்பெண் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று திசையன்விளை சிறப்பு பேரூராட்சியில், நவராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அந்த அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பேரூராட்சி முன்பு தூய்மைப் பணியாளர் 20க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.