தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகில் நேற்று (பிப்.27) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
அப்போது, “ நான் தமிழ்நாடு வரும்போதெல்லாம் எனது நெஞ்சம் இந்த மண்ணோடு கலந்து விடுகிறது. தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கின்றபோது என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து விடுகிறது. என்னை மகிழ வைக்கும் தமிழ்நாட்டை நானும் மகிழ வைக்க வேண்டும் என நினைக்கிறேன்.
தமிழர்களின் மொழி இன உணர்வு என்னை எப்போதும் ஆச்சர்யப்பட வைக்கிறது. அதற்கான காரணத்தை முழுமையாக கண்டறிய தமிழ் மொழியை முழுமையாக படிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்.
ஏழையாக இருக்கும் ஒரு சாதாரண தமிழன் கூட தனது கண்ணியத்தை விட்டு கொடுக்க தயாராக இல்லை. தமிழர்கள் ஒருநாளும் தனது சுயமரியாதையை விட்டு கொடுப்பதில்லை. இதை கண்டு நான் வியக்கின்றேன், மனதாரப் பாராட்டுகிறேன். இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் வழிகாட்டியாக திகழ்கிறது. தமிழ்நாட்டால் தான் இந்தியாவுக்கு வழிகாட்ட முடியும். ஜனநாயகம், சுயமரியாதை, மாநில உரிமைகள், பன்முகத் தன்மை, சகோதரத்துவம், சமத்துவம் உள்ளிட்டவற்றில் தமிழர்கள் தான் இந்தியாவுக்கே வழிகாட்டுவர் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தேசத்தின் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே உதவி செய்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு நாட்டின் எஞ்சிய பொருளாதாரத்தை சீரழித்தது.
ஒரு நல்ல அரசானது, பணக்கார்களுக்கு வரி விதிக்க வேண்டும், ஏழைகளுக்கு உதவ வேண்டும். ஆனால், இந்தியாவின் பிரதமர் மோடி பணக்காரர்களுக்கு உதவி செய்துவிட்டு, ஏழைகளுக்கு வரி விதிக்கிறார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை குறைவதில்லை.
பிரதமர் மோடியின் தவறான மக்கள் விரோத செயல்பாடுகளைப் பற்றி பேச எனக்கு ஒருபோதும் பயம் ஏற்பட்டதில்லை. அவர் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அவர் என்னை பயமுறுத்த முனைவதை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. பிரதமர் மோடியால், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு ஒரேயொரு காரணம் தான் இருக்கிறது.
நான் நேர்மையானவன். என் கரங்கள் சுத்தமாக இருப்பதால் மோடியின் முழுமையான உருவத்தை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுவதில், எனக்கு எந்த பயமும் இல்லை. நான் நேர்மையாக இருப்பதால் தான் பிரதமர் மோடி 24 மணி நேரமும், என்னை வீழ்த்துவது பற்றியே சிந்தித்து வருகிறார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இயக்குவது போல் தமிழர்களையும் பிரதமர் மோடி இயக்க நினைக்கிறார்.
விரைவில் அந்த ரிமோட் உள்ளே இருக்கும் பேட்டரியை மக்கள் எடுத்து வீசப் போகிறார்கள் என்பது மோடிக்கு தெரியவில்லை. இதை மோடியும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது நான் எனது ஆசை. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழ்நாடு தான் பாதை வகுத்து தரும்” என்றார்.
இதையும் படிங்க : அங்கன்வாடி பணியாளர் தற்கொலை முயற்சி: காவல் துறை விசாராணை!