திருநெல்வேலி: சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன், மன்னர் எனப் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட அழகு முத்துக்கோன் குருபூஜை தினம் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் உள்ள அழகுமுத்துக் கோன் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இன்று அழகு முத்துக்கோன் குருபூஜை தினத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குறிப்பாக யாதவ மகாசபையைச் சேர்ந்த இளைஞர் அணி தலைவர் பொட்டல் துரை, தனது மாலையினை அணிவிக்க வந்தபோது அவரது ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஒலி எழுப்பியபடி, காரின் மேல் பகுதியில் அமர்ந்த படியும் கார் கதவுகளை திறந்துவிட்ட படியும் அனல் பறக்க விசில் அடித்துக்கொண்டு பேரணியாக வந்தனர்.
அதேசமயம், காரில் அதிக ஒலி எழுப்பி வரக்கூடாது; காரின் மேல் பகுதியில் அமர்ந்து செல்லக்கூடாது; பேரணி செல்லக்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது. மேலும், முன்னெச்சரிக்கையாக அழகு முத்துக்கோன் சிலை அமைந்துள்ள பகுதியில் நெல்லை மாநகர காவல் துறை சார்பில் துணை ஆணையர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பொட்டல் துரை ஆதரவாளர்கள் விதிகளைமீறி பேரணியாக வந்ததை அறிந்த காவல் துறையினர் அவர்களை அதிரடியாக தடுத்து நிறுத்தினர். மேலும், 5க்கும் மேற்பட்ட கார்களில் சாவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர் இதனால் ஆத்திரமடைந்த பொட்டல் துரை ஆதரவாளர்கள் காவல் துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய யாதவ மகாசபையினர், ''நெல்லையில் கோயில் தேரில் சாதிக்கொடியை பறக்கவிட்ட போது ஒன்றும் செய்யாத காவல்துறையினர் நமக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு விதிக்கிறார்கள்?'' என்று ஆதங்கத்தில் பேசினர். காவல்துறையின் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட கார் சாவிகள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு யாதவ மகா சபையைச் சேர்ந்தவர்கள் விதிகளைப் பின்பற்றி கார் கதவுகளை மூடியபடி சென்றனர்.
மேலும், விதிகளை மீறிய வாகனங்களில் வந்தவர்களின் விவரங்களை நெல்லை மாநகர காவல்துறை சேகரித்து வைத்துள்ளனர். எனவே, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இதைப் போல் விதிகளை மீறி வந்த மற்றொரு அமைப்பைச் சேர்ந்த செந்தூர் மகாராஜன் என்பவருக்கு, காவல்துறையினர் சம்பவ இடத்தில் வைத்தே அதிரடியாக 1500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
எனவே, எப்போதும் போல் கெத்து காட்டி மாலை அணிவிக்கலாம் என்ற கனவோடு வந்த சமுதாயத் தலைவர்களுக்கு இந்த ஆண்டு நெல்லை மாநகர காவல்துறையின் கடும் கிடுக்குப்பிடி கட்டுப்பாடுகள் சம்பவம் அவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக பொட்டல் துரை ஆதரவாளர்கள் அதிக அளவில் கார்களில் வந்தது மட்டுமல்லாமல் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஒலி எழுப்பானை நீண்ட நேரம் ஒலிக்க விட்டபடி ஆரவாரத்தோடு வந்தனர். இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்தனர். இது போன்ற சம்பவங்களால் அழகுமுத்துக்கோன் சிலை அமைந்துள்ள பகுதியில் இன்று பிற்பகல் வரை பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீடிப்பு சட்டவிரோதம்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்குபிடி!